×

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் நடப்பாண்டில் குற்ற சம்பவங்கள் குறைவு

பெரம்பூர்: புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால், நடப்பாண்டில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் அதிக குற்ற செயல்கள் நடைபெறும் மாவட்டங்களில் புளியந்தோப்பு காவல் மாவட்டமும் ஒன்று. இந்த காவல் மாவட்டத்தில், கொடுங்கையூர், எம்கேபி நகர், வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு, ஓட்டேரி, செம்பியம், திருவிக நகர் ஆகிய 8 காவல் நிலையங்களும் புளியந்தோப்பு, எம்கேபி நகர், செம்பியம் ஆகிய 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன.

எம்கேபி நகர், புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்றச் செயல்கள் சற்று அதிகமாக நடைபெறும் பகுதிகளாக உள்ளன. தற்போது, போலீசாரின் அதிரடி நடவடிக்கையால்,இந்த காவல் சரகத்தில் படிப்படியாக குற்ற செயல்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2023ம் ஆண்டு குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இந்த காவல் மாவட்டத்தில் 2022ம் ஆண்டு 10 கொலைகள் நடைபெற்றன.

2023ம் ஆண்டும் 10 கொலைகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. இதேபோன்று இந்த ஆண்டு சுமார் 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்குகளை பொறுத்தவரை கடந்த 2022ம் ஆண்டு 60 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 142 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு கஞ்சா வழக்குகளை பொருத்தவரை 106 வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டு 197 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 107 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரவுடிகளை பொறுத்தவரை கடந்த 2022ம் ஆண்டு புளியந்தோப்பு சரகத்தில் 721 ரவுடிகள் இருந்தனர். தற்போது 100 ரவுடிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்ட நிலையில் அவர்களது தகவல்கள் குறிப்பிட்ட அந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இதன் மூலம் தற்போது புளியந்தோப்பு சரகத்தில் 652 ரவுடிகள் உள்ளனர். இதில் 11 பேர் அதிதீவிர ரவுடிகள் பிரிவிலும், 53 பேர் தீவிர ரவுடிகள் பிரிவிலும் உள்ளனர். குறிப்பிட்ட இந்த 64 ரவுடிகளும் தொடர்ந்து போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மீதமுள்ள 588 ரவுடிகளும் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 246 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.25 கோடி மதிப்புள்ள பொருட்கள் உரிய பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் கூறுகையில், ‘‘தீவிர நடவடிக்கை மூலம் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களில் நடமாட்டம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரி உள்ளிட்ட இடங்களில் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது போதை ஊசி கலாசாரம் சில இடங்களில் அதிகரித்து வருவதால் மருந்தகங்களில் தீவிர சோதனை நடத்தி அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வட மாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் அனுப்பப்படும் பார்சல் வகைகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு போதை மாத்திரைகள் பார்சல்களில் வந்தால் அது குறித்து விசாரணை நடத்தி போலீசார் குறிப்பிட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர். ஒரு காலகட்டத்தில் குற்ற செயல்கள் அதிகம் நிகழும் மாவட்டமாக பார்க்கப்பட்ட புளியந்தோப்பு மாவட்டத்தை மெல்ல மெல்ல அதன் தன்மையை காவல்துறையினர் மாற்றி வருகின்றனர். வருங்காலங்களில் முற்றிலுமாக குற்ற செயல்கள் இல்லாத காவல் மாவட்டமாக புளியந்தோப்பு காவல் மாவட்டம் மாற்றப்படும்,’’ என்றார்.

The post புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் நடப்பாண்டில் குற்ற சம்பவங்கள் குறைவு appeared first on Dinakaran.

Tags : Pulianthoppu police district ,Perambur ,Puliantopu ,police district ,Puliantoppu ,Chennai ,Kodunkaiyur ,MKP ,Pulyanthoppu police district ,
× RELATED போதை ஊசி விற்ற ஜிம் மாஸ்டர் கைது